விவசாயம் தெரியாது; மக்கள், மண் மீது பாசம் உண்டு: பெருந்துறையில் ஸ்டாலின் உருக்கம்

மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு, பெருந்துறையில் நேற்று நடந்தது. இதில் ஸ்டாலின் பேசியதாவது: விவசாயிகளின் கோரிக்கை, நூறு நாட்களில் நிறைவேற்றப்படும் என உறுதிமொழி அளிக்கிறேன். விவசாயிகளின் கோரிக்கை, தீர்மானங்களில் சில பிரச்னைகள், சட்ட சிக்கல்கள், நிதி நிலை உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. அவற்றை தீர்க்க அதிகாரிகள், விவசாயிகள் கொண்ட குழு அமைப்பேன். ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி, விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அளித்துள்ளார். பா.ஜ., அரசு சர்வாதிகார போக்குடன், மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. 

பதவியை காப்பாற்றி கொள்ள, ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க, தன்னை விவசாயி என்றும், என்னை விவசாயி இல்லை என்றும், முதல்வர் பழனிசாமி கீழ்தரமாக கொச்சையாக விமர்சனம் செய்கிறார். எனக்கு விவசாயம் தெரியாது. ஆனால், மக்கள் மீது, மண் மீது பாசம் உண்டு. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை, திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்தை, தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், முதலாவதாக சட்டசபையில் நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.