விவசாயிகளை அரசியல் கட்சியினர் ஏணியாக பயன்படுத்துகின்றனர்

ஈரோட்டில் விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி இது குறித்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 2004ல், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, கடன் சுமை உள்ளிட்ட பல பிரச்னைகளால் மூன்று லட்சம் விவசாயிகள், நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்டனர். இதை சரி கட்டவே எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில், 2004ல் குழு அமைக்கப்பட்டது. 

இக்குழு, 2005ல் அறிக்கையை சமர்பித்தது. ஆனால் அறிக்கையை, காங்., கிடப்பில் போட்டது. மத்திய வேளாண் சட்டத்தால் பெரிய நன்மையும், தீமையும் இல்லை. அரசு ஆண்டுதோறும், பத்ம விருதுகளை சாதனையாளர்களுக்கு வழங்குகிறது. மக்கள் தொகையில், 60 சதவீதமாக உள்ள விவசாயிகளுக்கு, இவ்விருதை அரசு கிள்ளி தான் கொடுக்கிறது. சினிமா துறையினருக்கு, பத்ம விருதுகள் அதிகம் கொடுக்கப்படுகிறது. விவசாயிக்கு நாட்டில் அவ்வளவுதான் மரியாதை. விவசாயிகளை, அரசியல் கட்சியினர் ஏணியாகதான் பயன்படுத்தி கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.