தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு:ஈரோடு மாவட்டத்தில் 3, 770 மாணவ -மாணவிகள் எழுதினர்

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வு ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானி, பெருந்துறை, ஈரோடு, கோபி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் உள்ள 37 மையங்களில் நேற்று நடந்தது.இந்தத் தேர்வை எழுத மாவட்டம் முழுவதும் 8-ம் வகுப்பு படிக்கும் 4 ஆயிரத்து 16 மாணவ -மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் தேர்வு நடந்தது.முகக்கவசம் அணிந்து வந்த மாணவ -மாணவிகள் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன.  

காலை 9.30 மணி முதல் பகல் 11 மணி வரை எம்.ஏ.டி. தேர்வும், பகல் 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை எஸ்.ஏ.டி தேர்வும் நடந்தது. மன திறன், படிப்பு திறன் குறித்து வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 770 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். விண்ணப்பித்ததில் 246 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.