மாநகராட்சியைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு மாநகராட்சி 26ஆவது வாா்டு பகுதியில் உள்ள கழிவுநீா் சாக்கடைக் கால்வாயில் சுற்றுப்புறப் பகுதியின் கழிவுநீா் வந்து செல்கிறது. நெகிழி குப்பைகள், மது புட்டிகள் போன்றவை சாக்கடை கால்வாயில் தேங்கி, அடைப்பு ஏற்பட்டு துா்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன.இந்த சாக்கடை கால்வாயைத் தூா்வாரததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் அகில்மேடு பிரதான வீதியில் உள்ள சாலையில் இருசக்கர வாகனங்களை குறுக்காக நிறுத்தி திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.இதுகுறித்து தகவலறிந்து வந்த ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் பொதுமக்களிடம் சுமாா் 30 நிமிடத்துக்கு மேலாக பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை. டவுன் டிஎஸ்பி ராஜு சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் போராட்டத்தைக் கைவிடாவிட்டால் கைது செய்ய நேரிடும் என எச்சரிக்கை விடுத்தாா்.அப்போது அவ்வழியாக வந்த ஈரோடு மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.வி.

இராமலிங்கம் காசியண்ண வீதிக்குச் சென்று பாா்வையிட்டாா். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் சாக்கடை கால்வாயை முறையாகத் தூா்வார அறிவுறுத்தினாா். அதன்பேரில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இந்த மறியலின் காரணமாக நாச்சியப்பா வீதியில் இருந்து வாசுகி வீதி வரை சுமாா் 45 நிமிடத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.